Sunday, July 17, 2022

மீசை என்பது வெறும் மயிர்

"மீசை என்பது வெறும் மயிர்"
ஆமா. இதுதான் அந்த நாவலோட பெயர். என்ன? 'மயிர்' ங்குற வார்த்தையெல்லாம் தலைப்புல இருக்குற ஒரு புத்தகத்தை படிக்கத் தான் வேண்டுமா? எனக் கேட்டால். வேண்டாம் என்பதே பதில். என் பதில் இல்லை. இந்த நாவலின் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யாவின் பதில். ஆமா. மயிரை, மயிர் என்று தானே கூற முடியும், அதுமட்டுமில்லாமல் அது தான் தமிழ் சொல்லும் கூட. மனித உடலின் சில பாகங்களை கெட்ட வார்த்தைகளாக்கி அருவருக்கத் தக்கதாக மாற்றியுள்ள உயர் வகை தத்துவ கோட்பாடுகளிலிருந்து மயிரும் தப்பவில்லை. "மயிர் தானே எல்லாருக்கும் முக்கியம். அது தான் நீளமாக வளர வேண்டும். அது தான் கொட்டக் கூடாது. அதுதான் நரைக்கக் கூடாது. அதை ஒழுங்குப்படுத்தவும், அழகுப்படுத்தவும் அத்தனை மெனக்கெடல்கள். ஆனால், அது கெட்ட வார்த்தையா?" எனக் கேட்கும் ஆதவன், "மயிர் என்ற வார்த்தை அட்டைப் படத்தில் இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், அந்த புத்தகத்தை வெளிப்படையாக கையில் வைத்துக்கொள்ள தயங்குகிறவர்கள், இந்த புத்தகத்தின் உள்ளடகத்தை படிக்க தெம்பற்றவர்கள். எனவே அவர்கள் படிக்க வேண்டாம்" எனக் கூறுகிறார். அதையே நானும் வழி மொழிகிறேன். சரி. விசயத்துக்கு வருவோம். "மீசை என்பது வெறும் மயிர்" என்ற தலைப்பை படித்தவுடன் "நா மீசை வச்ச ஆம்பளை டி" மாதிரியான தமிழ் சினிமா டைலாக்குகள் காதுகளின் கதவைத் தட்ட, ஏதோ பெண்ணியம் பேசும் புத்தகம் என்று நினைத்து விட்டேன். ஆனால், ஆதவன் நம்மை கூட்டிச் செல்வது இந்தியாவின் ஆன்மாவிடம். இந்த நாவல் முழுக்க அவர் எதைப் பற்றி பேசுகிறார்? ஏன் இந்த நாவலை படிக்க வேண்டுமென கூறுவதற்கு முன்னால், ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் புத்தக அறிமுகத்தைப் பற்றி கிண்டலாக ஆதவன் கூறியதை உங்களுக்கு சொல்கிறேன். "பொதுவாக புத்தகத்தை அறிமுகம் செய்து பேசுபவர்கள் செய்வது இரண்டு விஷயம். 1. புத்தகத்தைப் பற்றி வரிவரியாக பேசி, அதற்கு கோனார் உரை போட்டு, அதான் எல்லாத்தையும் இவரே சொல்லிட்டாரே? இனி அந்த புத்தகத்தை வாங்கணுமா? என நினைக்க வைப்பது. 2. புத்தகத்தை படிக்காமல், ஆசிரியர் நல்லவர், அப்பேர்ப்பட்டவர் என்று எதையாவது பேசிவிட்டு செல்வது" ஆக. ஆதவனின் புத்தகத்தைப் பற்றி எழுதும் இந்த மதிப்புரையில் மேற்கூறிய இரண்டு வழிகளையும் பயன்படுத்தக் கூடாத கட்டாயத்தில் நான் உள்ளது உங்களுக்கு புரிகிறது தானே?. எனவே புத்தகம் தொட்டுச் செல்லும் இடங்களையும், ஏன் அதை படிக்க வேண்டும் என்று மட்டும் கூறுகிறேன். சமீபத்தில் வெளியான பார்த்திபனின் இரவின் நிழல் படத்தைப் போலவே, இதுவும் ஒரு non-linear வகைமையைச் சார்ந்தது தான். "பதிப்பக அடிமைகள் பலரும் தண்டி தண்டியாக எழுதி வண்டி வண்டியாக ஏற்றிக் கொண்டிருக்கொண்டிருக்கும் காலம்" என்று நாவலில் வரும் அவரின் கூற்றிற்கு இணங்க தலையணை ஏதும் தாயாரிக்காமல் வெறும் 176 பக்கங்களை மட்டுமே இந்த நாவல் கொண்டிருக்கிறது. சந்திப்பு, நேர்க்காணல், நாவல் சுருக்கம் என்றுள்ள இப்புத்தகம் எனக்கு தெரிந்த வரையில் நாவல் வடிவத்தில் ஒரு புதியவகை. மொழிபெயர்ப்பின் அரசியல், இரண்டாம் உலகப் போர், உலகம் முழுவதும் போர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக புத்தகங்கள் அழிக்கப்படுவது, ஈஜின் நிலவரை நூலகம், பிடல் காஸ்ட்ரோவின் சுருட்டு, தனுஷ்கோடி புயல், இலங்கையின் வளர்ச்சி சித்திரத்தை தீட்டிய தமிழர்களின் ரத்தம், இலங்கை பூர்வீக தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்களிடையேயான அரசியல், முடியை சவரம் செய்யும் நாவிதர்களுக்கும் மருத்துவத்திற்கும் உள்ள சம்பந்தம் இப்படி விரியும் இந்நாவலின் மையச்சரடு, இந்தியாவை புராண காலம் தொட்டு, இன்றுவரை இறுக்கிக் கட்டி வைத்துள்ள மந்திரகயிறுதான். என்ன அது? "நாடு திரும்பா எழுத்தாளர் வரிசை: நந்தஜோதி பீம்தாஸ்" என புத்தக முகப்பட்டையில் உள்ளது. அப்படியானால் இது மொழிப்பெயர்ப்பு புத்தகமா? யார் அந்த பீம் தாஸ்? போதாக்குறைக்கு இதில் சுத்த ரத்தத்தில் அழுகும் தொப்புள் கொடி மற்றும் ஆண்களற்ற நகரம் என்று இரு சிறு கதைகளும், ஒரு fantasy story யும் வேறு உள்ளது. சரி. இதற்கும் "மீசை என்பது வெறும் மயிர்" என்ற அந்த தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்? எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள இபுத்தகத்தை பற்றி விக்கிபீடியாவை தடவாமல், you tube ஐ அணத்தாமல், புத்தக அறிமுக உரைகளில் குறிப்பெடுக்காமல் அதைப் படிப்பது ஒன்றே வழி. அதை நீங்களே வாசிக்கும் பொழுது வரும் உணர்வை, புரிதலை, அனுபவத்தை, அழுகையை என் மதிப்புரை கெடுத்துவிடக்கூடாதுதென்பதே இத்தனை திரைச்சீலை வரிகளுக்கும் ஒரே காரணம். நிச்சயம் வேறெந்த புத்தகத்தையும் படித்தபோது கிடைக்காத ஒரு அனுபவம் இதில் காத்திருக்கிறது. Don't miss this book. கொஞ்சம் பொறுங்கள். உடனே புத்தகத்தை ஆர்டர் பண்ண மொபைலை தேட வேண்டாம். உங்கள் ஆர்வத்தை மேலும் கூட்ட, புத்தகத்தின் சில வரிகளை கீழே சொல்கிறேன். அதையும் படித்துவிட்டு செல்லுங்கள். (அந்த வரிகள் எந்த வகையிலும் புத்தகத்தின் கதையை வெளிப்படுத்தி விடாது. அதாவது, ட்ரெயிலர், டீசர் வகைகளைச் சார்ந்தது). 🔅இருக்கும் வெளிச்சம் குறைவென்றாலும் எல்லாமும் கண்ணுக்கு தெரியும் தானே? 🔅பிறந்து வளர்ந்த மண் காலில் ஒட்டிக்கொள்கிறது மனதிலோ உதிர்ந்துகொண்டிருக்கிறது. 🔅தலைக்கு விலை வைத்து கொல்லப்பட்ட பெளத்தர்களின் தோலை உரித்துப் போர்த்திகொண்டதால் கிடைத்திருக்கும் அகிம்சை வேடத்தைக் கலைத்து இந்தியாவின் சுயரூபத்தை வெளிக்கொணரும் கடப்பாடு கொண்ட எழுத்து. 🔅போர் முடிந்து விட்டது என்று சொல்வது கூட, போரின் ஒரு பகுதிதான். 🔅 தேசியத்தின் பெயரால் அழிவுகள் நடக்கும்போது, முடிந்த மட்டிலும் தேசத்துரோகியாக வாழ்வது அவசியம். 🔅வாழ்க்கை எனும் கடலை ஊறஊற குடித்தவர்போல் அமைதியுற்றிருக்கும் அவருக்குள் தான் எத்தனை கொந்தளிப்புகள். 🔅மனிதர்களுக்கு பெயர் எதற்கு? 🔅எவ்வளவு பெருமிதம் கொண்டதாய் இருந்தாலும் ஒரு ரத்த வெள்ளத்தில் மூழ்கிடிக்கப்பட்ட பிறகு ஓர் அழுகிய பிணமாகி விடுகிறதல்லவா கடந்தகாலம்? 🔅புனைவு என்பது இரண்டு அட்டைகளுக்கு நடுவே தொடங்கி முடிவதல்ல. அது முன்னட்டையின் மேல் நுனியிலே தொடங்கி பின்னட்டையின் ஈற்றிலே முற்று பெறுகிறது. அப்றம் என்ன? ஆரம்பிக்கலாமா?

Monday, July 11, 2022

Collector sir

"சீதா பூ பறித்துகொண்டிருந்தாள்" "கண்ணன் பந்து விளையாடினான்" "Rama ate apple" இதெல்லாம் என்னனு புரியலையா? மத்த யாரை விடவும் 90s கிட்ஸ்க்கு நல்லா புரியுமே. சரி நானே சொல்றேன். தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் வெளியிடப்படும் தமிழ், இங்கிலிஷ் ரெண்டு பாட புத்தகத்துலயுமே இலக்கண பகுதிகளில் இந்த மாதிரி உதாரணங்கள் தான் சொல்லப்படிருக்கும். இதைவிட்டால் செல்வி, முருகன், மீனா போன்ற பெயர்கள் இடம்பெறலாம். அது ஆறாம் வகுப்புனாலும் சரி, பத்தாம் வகுப்புனாலும் சரி. வாக்கியங்கள் மாறுமே தவிர. பெயர்கள் மாறாது. 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள புத்தகங்களில் வண்ண பக்கங்கள் இருந்ததா என்று நினைவில் இல்லை. ஆனால் 6 முதல் 12 வரை கண்டிப்பாக வண்ணம் என்றே வார்த்தைக்கே இடமில்லை. பாடங்களின் நடுவே வரும் ஒன்றிரண்டு படங்கள் கூட கருப்பு வெள்ளையில், சில சமயங்களில் ஒழுங்காக அச்சாகாமல் கூட இருக்கும். வடிவேலு ஒரு படத்தில் அவருக்கு அம்மாவாக நடிப்பவரிடம் நகைச்சுவையாக ஒன்று சொல்வார், "என்ன 10 மாசம் சொமந்து பெத்தேன்னு சொல்லிட்டே இருக்க? உள்ள ஒரே இருட்டு, ஒரு பேன் கிடையாது, லைட் கிடையாது, தவிச்ச வாய்க்கு தண்ணி குடுக்க ஆள் கிடையாது" என்று. அந்த வசனம் மாதிரி தான் இந்த புத்தகங்களும், ஒரு முன்னுரை கிடையாது, ஏன் இந்த பாடத்தை படிக்கணுமுனு தெரியாது, ஒரு கலர் படம் கிடையாது, ஒரு விளக்கப்படம் கிடையாது, பல வருடங்களுக்கு ஒரு அப்டேட்டும் கிடையாது. சரி உள்ளடக்கம் தான் இப்படி இருக்குனு பார்த்தல், புத்தகங்களின் அட்டைப்படம் தோழா படத்துல வர கார்த்தி பெய்ண்டிங் மாதிரி இருக்கும். எவனக்கும் புரியாது. (வாத்தியாருக்கும் தான்). இது போதாதுனு ஒவ்வொரு பாட புத்தகமும் ஒவ்வொரு அளவுல இருக்கும். மொத்தத்துல புத்தகத்தை பார்த்தால் தெறித்து ஓடும் மனநிலை தான். கட்டாயத்தின் பேரில்தான் படிக்கனும். ஆனால், சில வருடங்களுக்கு முன்பு மாற்றியமைக்கப்பட்ட பாட புத்தகங்களைப் பார்த்தேன். 1 முதல் 12ஆம் வகுப்பு வரை, முன் அட்டை முதல் பின் அட்டை வரை அத்தனையும் வண்ண பக்கங்கள், எல்லாம் ஒரே அளவில், அதிலும் அந்த முன் அட்டை வடிவமைப்பிற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் கொடுக்கலாம். வழமையான ராமன், கண்ணா பெர்களை விடுத்து தமிழ்நிலா, ஆதினி, பூ வேந்தன், வெண்பா போன்ற இனிமையான தமிழ் பெயர்களும், வகுப்பரை, பட்டிமன்றம் போன்று சூழல்கள் வரும் பகுதிகளில் ஆயிஷா, முகமது, பாத்திமா, ஜான் போன்ற எல்லா மதத்தினைச் சேர்ந்த பெயர்களும் இடம் பெற்றுள்ளன. கூடவே ஒவ்வொரு பாடத்திற்கும் கவிதைப் போல ஒரு தலைப்பிட்டு, முன்னுரை, முடிவுரையுடன் அழகாக விளக்கியுள்ளனர். பார்க்க பார்க்க அவ்வளவு ஆசையாக உள்ளது. நாம படிக்கும்போது இப்படியில்லையே என்று ஏங்க வைத்தது. சரி இவ்வளவு மாற்றங்களுக்கும் யார் காரணமா இருந்திருப்பாங்க? இத்தனைக்கும் இந்த மாற்றங்களெல்லாம் அரங்கேறிய சமயத்தில், தமிழகத்தில் ஒரு அரசியல் நிலையாமை நிலவிய காலகட்டம். எல்லாவற்றையும் தாண்டி தொலைநோக்குப் பார்வையுடன், புத்தகத்தில் வரும் சில பகுதிகளை பற்றி மேலும் விரிவாக அறிய நவீன தொழில்நுட்பதிற்கு ஏற்ப QR Code முறையெல்லாம் அறிமுகப்படுத்த தூண்டுகோலாக இருந்தது யார்? தமிழ்நாடு பாட புத்தகங்கள் திறன் வாந்ததாக இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. ஆனால் இன்று UPSC தேர்வில் வென்றவர்கள் கூட (வெளி மாநிலத்தவர்கள்) சில பாடத்திற்கு SCERT (தமிழக பாட புத்தகங்கள்) தான் படித்தேன் என்று கூறுமளவிற்கு தரம் உயர்த்தியது யார்? எல்லா கேள்விகளுக்கும் ஒற்றை பெயர் தான் பதில். மரியாதைக்குரிய திரு. உதயச்சந்திரன் IAS அவர்கள். ஆம். தற்பொழுது முதல்வரின் தனிச் செயலாளர்கள் 5 பேரில் ஒருவராக உள்ள அதே உதயச்சந்திரன் தான். பள்ளிக் கல்வி துறை செயலராக பணியாற்றியபோது தான் மேற்கூறிய மாற்றங்களை கொண்டுவந்தார். 🔅10, 12 ஆம் வகுப்பு பொதுதேர்வில் மாநில அளவில், மாவட்ட அளவில், பள்ளியளவில், பஞ்சாயத்து அளவில் இன்னும் என்னென்ன அளவெல்லாம் உள்ளதோ எல்லா அளவிலும் முதல் மூன்று இடங்களை பெரும் மாணவர்களை கொண்டாடி கொண்டிருந்த காலகட்டத்தில், சில மதிப்பெண்கள் வித்தியாசத்தில் அந்த இடங்களை தவற விட்டவர்கள், குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், தேர்வில் தோல்வியடைந்தவர்கள் என எல்லாரையும் கருத்தில் கொண்டு தர வரிசை (rank list) அறிவிக்கும் முறையை நீக்கியது. 🔅ராமநாதபுரத்தில் பேருந்தில் நிலையங்களை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகளை ஆக்சன் படத்தில் வரும் காட்சியைப் போன்று பிளான் பண்ணி அகற்றியது. 🔅மதுரையில் 10 வருடங்களாக பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மங்களம் என்ற 3 கிராமகளில் சாதி மோதல்களால் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை மூன்று மாத உழைப்பில் நடத்திக் காட்டியது. 🔅ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்து பின் அனுமதி வழங்கிய போது பல்வேறு கட்டுப்படுகளுடன், மரபையும் காத்து அதை வெற்றிகரமாக நடத்தியது. 🔅சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ் மண்ணில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவது, மீனாட்சி கோவில் திருவிழாவை அடுத்து மாவட்டமே கொண்டாடிய மாபெரும் அறிவுத் திருவிழாவான புத்தக திருவிழாவை நடத்தியாது. (இன்று தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் நடைபெறுகிறது). 🔅ஈரோடு மாவட்டத்தில் கல்விக் கடன் முகாம் மூலம் 8000 பேருக்கு 110 கோடி கடன் வழங்கியது. (தற்பொழுது எல்லா மாவட்டங்களிலும் கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது). 🔅 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வைணையத்தின் செயலராக இருந்த போது TNPSC ல் நடக்கும் ஊழல்களை பட்டியலிட்டு அவர்கள் மீது புகராளித்ததோடு மட்டுமில்லாமல், இணையவழி விண்ணப்பங்கள் அறிமுகம், கலந்துரையாடல் மற்றும் நேர்முக தேர்வை வீடியோ ரெகார்ட் செய்வது போன்ற புரட்சிக்கர திட்டங்களை கொண்டுவந்தது. 🔅நீலகிரியில் சிறு தேயிலை விவசாயிகளின் கூட்டுறவு தொழிற்சாலைகளை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் போது, தெற்க்காசியாவிலேயே முதல் முறையாக எலக்ட்ரானிக் தேயிலை ஏல முறையை அறிமுகப்படுத்தி இடைத்தரகர்களை ஒழித்தது. 🔅தமிழகமே கொண்டாடி தீர்த்த கீழடியை தமிழக்கூறும் நல்லுகத்திற்கு கொண்டு சேர்த்தது. இப்படி KGF பட ராக்கி பாய் மாதிரி "நான் பத்து பேரை அடிச்சி ரவுடியானவன் இல்ல, நான் அடிச்ச பத்து பேருமே ரவுடி தான்" னு மாஸ் டயலாக் பேச தகுதியானவர். சரி நான் மேல சொன்ன தகவல் எல்லாமே உதயச்சந்திரன் IAS னு போட்டவே விக்கிபீடியாவுலயே கிடைக்குமே. இதுல ஸ்பெஷல் என்ன இருக்குனு தான கேக்குறீங்க? இருக்கு. மேல சொன்ன சாதனைகளை அவர் பண்ணும் போது அதிகார வர்க்கம் உருவாக்கி வச்சிருக்க தடைகளை அவர் எப்படி எதிர்கொண்டார்? அவர் கொண்டு வந்த ஒவ்வொரு புது திட்டங்களும் உருவாக காரணமாக இருந்த அவர் வாழ்க்கையில நடந்த சம்பவங்கள் என்ன? அவர் எதிர்கொண்ட எளிய மனிதர்கள் பலர் இன்று வரை அவருடன் கதைப்பது எப்படி? இப்படி பல விஷயங்களை அவரே எழுதி 10 மாதங்கள், விகடனில் தொடராக வெளிவந்த 40 கட்டுரைகளின் தொகுப்பு தான் "மாபெரும் சபைதனில்" எனும் புத்தகம். "கலெக்டர் எனும் மந்திர சொல்லில் ஆரம்பித்து, அஞ்சல் அட்டை எனும் இறுதி கட்டுரை வரை அத்தனையும் அழகான சிறுகதைகள் என்று நான் சொல்லல, எழுத்தாளர் எஸ். ரா அணிந்துரையில் கூறியுள்ளார். அரசு அலுவலர்களும், ஊழியர்களுக்கும் தேவையான கை விளக்கு இந்த புத்தகம் என இறையன்பு IAS கூறியுள்ளார். ஆனால் அவர்களை விடவும், "எங்கங்க அரசு அலுவலர்கள் வேலை செய்றாங்க? யாருமே சரி இல்லங்க?" இப்படி புலம்புகிறவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். ஒவ்வொரு கட்டுரையிலும், வரலாறு, இலக்கியம், பண்பாடு, மானுடவியல், தொழில்நுட்பம், அறிவியல் இப்படி பலதுறைகளின் தகவல்கள், ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் செய்த நன்மை, தீமைகள், காந்திக்கும் தமிழர்களுக்குமான உறவு, பணிக்காலத்தில் அவரை வியக்க வைத்த சாதாரண மனிதர்கள், அரசின் கடை நிலை ஊழியர்கள் இப்படி நீளும். அதுமட்டுமில்லாம் 40 கட்டுரைகளிலுமே "சபைக்குறிப்பு என்றொரு பகுதியில் நிறைய தமிழ், ஆங்கில நூல்கள், அயல்மொழி திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவண படங்கள் என பலவற்றை அறிமுகப்படுத்துகிறார். நாம சாதாரணமா நண்பர்களிடம் பேசும்போது கூட சொல்லுவோம் "இவரு பெரிய கலெக்டரு". ஆனா அந்த பெரிய கலக்ட்ரருக்கும் எப்படி பணி சூழல் இருக்கும், எவ்வளவு சாவால்கள் இருக்கும்னு படிக்கும் போது ஆச்சரியமாக இருக்கும். அதிலும் VAO, தாசில்தார் இன்னும் எத்தனை அதிகாரிகள் இருந்தாலும் மக்களுக்கு ஏன் கலெக்டர் மிக நெருக்கமான சொல்லாக இருக்குனு சொல்லும் போது, நிஜமாவே " பேசாம நாமளும் கலெக்டர் ஆகிடலாமான்னு தோணும்". இந்த புத்தகத்தை படிக்கும் போது, உதச்சந்திரன் அவர்கள், பல்வேறு புரட்சி திட்டங்களை உருவாக்கிய ஹீரோ என்ற பிம்பம் உயர்ந்து கொண்டே போகும்போது, தமிழ் இலக்கிய புலமையுடையவர், கிரிக்கெட், கால்பந்தாட்டங்களை விரும்பி பார்ப்பவர், ஓவியம், கட்டிடக்கலை, இசை, சினிமா அபிமானி இப்படி ஒரு கலா ரசிகனாக இன்னொரு பிம்பம் உயர்ந்து போட்டி போடும். சரி ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து உதயச்சந்திரனை நம் மனதில் ஒரு உருவத்தில் அடைக்கலாம் என்று பார்த்தால், "வெற்றிலை போட்டால் கோழி முட்டும்" என்று சின்ன வயதில் அம்மா சொல்லியதை நம்புவதால் இன்றுவரை வெற்றிலை போடுவதில்லை என்று அவர் கூறும் போது வெடித்து சிரித்து விடுவோம். குறிப்பு: மாபெரும் சபைதனில் த. உதயாச்சந்திரன் விகடன் பிரசுரம் விலை: 300

Monday, July 4, 2022

சென்னைக்கு மிக அருகில் காவிரி!!

இயக்குனர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படம் ரிலீசுக்காக எல்லாரும் மரண வெயிட்டிங்ல இருப்பீங்களே? அப்படியே பாகுபலி பார்ட் 3 கண்ணுல வந்து போகுமே. எனக்கும் வருதே. எழுத்தாளர் கல்கி எழுதுன "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக வைத்துதான் இந்த படம் எடுக்கப்படுதுனும், அதுல ஹீரோ ராஜராஜ சோழன்னும் நமக்கு எல்லாருக்குமே தெரியும். ஆனா அதென்ன டைட்டில் 'பொன்னியின்' செல்வன்? 'பொன்னினா' என்ன? அரிசியா? (நாவல் படித்தவர்களுக்கு தெரியும்) சோழ நாட்டின் அரசன் ராஜராஜ சோழன். திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை உள்ளடக்கிய அந்நாட்டின் செழுமைக்கும் வளமைக்கும் ஒரே காரணமாகத் திகழ்ந்தது 'காவிரி' ஆறு. அட நல்லா படிங்க 'காவேரி' இல்ல 'காவிரி'. அதன் இன்னொரு பெயர்தான் பொன்னி. (அதனால் தான் பொன்னியின் செல்வன்). இப்படி திருச்சியை மையமிட்டுள்ள காவிரி ஆறானது ஒருகாலத்தில் சென்னைக்கு மிக அருகில் ஓடியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இன்றுள்ள காவிரியின் தடம் அதன் 19 வது தடமாம்!!!. அப்படியானல், சென்னையையும் சேர்த்து இன்னும் 18 தடங்களில் ஓடியுள்ள காவிரி, இன்று 19வது தடத்தில் ஓடுகிறது என்றால், 20, 21 என்று தடம் மாற வாய்ப்பிருக்கிறதோ?!. சரி. பெயர் காரணத்திற்கு வருவோம். தென்பெண்ணை ஆற்றைப் போலவே, முன்பு காவிரியிலும் பொன்தாது (gold particles) அடித்து வரப்படிருக்கலாம் (உபயம்: கர்நாடகா-கோலார்), அதனால் 'பொன்னி' எனப் பெயர் பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அப்படியானால் 'காவிரி' என்றால் என்ன பொருள்? 'கா' என்றால் சோலை. தான் பாயும் இடங்களில் எல்லாம் சோலைகளை விரிக்கும் (உருவாக்கும்) தன்மை கொண்டது எனப் பொருள். நல்லாருக்குள்ள? இப்படி செல்லும் இடங்களிலெல்லாம் சோலைகளை உருவாக்கிய காவிரியில், தற்பொழுது தண்ணீர் வரத்து குறைவதற்கு கர்நாடகாவிலிருந்து குறைவாக தண்ணீர் திறந்து விடுவது மட்டுமே காரணமல்ல, நாம் கதகதப்பாய் உறிஞ்சி குடிக்கும் காப்பியும் தான்னு சொன்னா உங்களால நம்ப முடியுதா? தேன்கூடு உடைந்து காவிரியில் கலந்துவிட்டால் தண்ணீர் மாசடைந்து விடும் என்று சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் பதறுகிறார். இன்று கழிவுகளும் காவிரியும் கட்டிப்புரழ்வது கண்டால் கவுந்தியடிகள் என்ன ஆவாரோ? மணற்பாங்கான நிலத்தில் அணை கட்டுவது கடினம், அப்படியொரு இடத்தில் காட்டாறான காவிரியை தடுத்து, அதுவும் கடைக்காலே (அஸ்திவாரம்) இல்லாமல் கல்லணை கட்டப்பட்டிருந்த தொழில் நுட்பத்தைப் பார்த்து வியந்தோம் எனக் கூறிய பிரிடிஷ் பொறியாளர் திரு. ஆர்தர் காட்டன் தற்கால அதிநவீன தெர்மாகோல் தொழில்நுட்பதை கண்டால் மூர்ச்சையாகிவிடுவாரோ? இதெல்லாம் "எங்கப்பா கத்துக்கிட்ட?"னு (ஆதவன் படத்தில் வரும் சரோஜாதேவி style ல) நீங்க கேக்குறது புரியுது. நம்ம எழுத்தாளர் நக்கீரன் எழுதிய "நீர் எழுத்து" புத்தகத்துலதான் இதையெல்லாம் படிச்சேன். அப்படினா இது காவிரியைப் பற்றிய புத்தகமா? காவிரியைப் பற்றி மட்டுமல்ல, வைகை, பாலாறு, தாமிரபரணி, நொய்யல், சிறுவானி இப்படி தமிழ்நாட்டு ஆறுகள் பலவற்றின் இயற்கை பெயர்களும், வடமொழி பெயர்களாக திரிந்துள்ளது பற்றியும், அதற்கு புனையப்பட்டுள்ள புராணங்கள் பற்றியும், அந்த நதிகளைச் சுற்றியுள்ள பண்பாட்டு கூறுகளைப் பற்றியும், அவற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகள், அணைக்கட்டுகளால் தூண்டப்படும் நிலநடுக்கங்கள், இணைந்துள்ள துணையாறுகள், ஆறுகள் இணைப்பு பற்றிய நன்மை, தீமைகள், வெட்டப்பட்டுள்ள கால்வாய்கள் மற்றும் அவற்றின் தற்கால நிலை பற்றியும் இந்த புத்தகத்தில் கூறியுள்ளார். அப்படினா! இது "தமிழக ஆறுகளைப்" பற்றிய புத்தகமா? அட தமிழக ஆறுகள் மட்டுமல்ல, தமிழகத்தில் எவ்வளவு குளங்கள் உள்ளது? அவற்றை எந்த காலத்தில் எந்த மன்னர் வெட்டினார்? அதிலுள்ள தொழில்நுட்பங்கள் என்ன? அகழி, இலஞ்சி, நீராழி, கயம், கிடங்கு, குட்டை, குட்டம், பெருங்குட்டை, குண்டம், குண்டு, சிறை, சுனை, சேங்கை, தடம், தடாகம், புனற்குளம், பொய்கை, வலயம், வாவி... இப்படி நீளும் குளங்களின் தன்மைக்கு ஏற்றார்போல் உள்ள பெயர்கள் என்ன? மேலும் தமிழகத்தில் உள்ள ஏரிகள், கரை, மதகு, கலிங்கல், கோடி போன்ற அதன் உறுப்புகள், நீர் கசிவதை தடுக்க அமைக்கப்படும் ஊடுசுவரே இல்லாமல் உருவாக்கப்பட்ட ஏரிகள், பாசனத்திற்காக அவற்றில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் பற்றியெல்லாம் கூறுவதோடு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என ஒவ்வொரு திணைக்கும் அதன் தன்மைக்கு ஏற்றவாரு வெவ்வேறு வகையான ஏரிகளை பழந்தமிழர்கள் ஏற்படுத்தியிருப்பதையும், அதை வண்டு கூட மாசுப்படுத்தி விடாமல் மிகவும் சிரத்தை எடுத்து பராமரித்திருந்தது பற்றியும் கூறும்போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. அப்படியானல், இது "தமிழக நீர்நிலைகள்" பற்றிய புத்தகமா? நானும் அப்படிதான் நெனச்சேன். ஆனால் ஆறு, ஏரி, குளங்களோடு சேர்த்து நமது வீட்டுக்குழாய்களின் ரத்த ஓட்டமான கரப்புநீர் (நிலத்திலுள்ள நீர்), ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெய்யும் மழைநீர் நிலத்தடியில் நீரகமாக மாறியுள்ளது. அதன் தற்போதையை நிலை, நிலத்தடி நீரை உபயோகப்படுத்ததான் கிணறு வெட்டும் முறை பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் கிணறு வேறு, கேணி வேறு என்று கூறும் ஆசிரியர், கிணறுகளின் சில வகைகளையும் பட்டியலிட்டுள்ளார். இதையெல்லாம் கூட விடுங்க. ஆறு, ஏரி, குளம் இவையெல்லாம் எவ்வாறு மாசடைந்து வருகின்றன? என்பதை பற்றி இந்த புத்தகத்தில் இவர் கூறியதை படித்ததும், "நாமெல்லாம் போர்வெல் போட்டு சுத்தமான தண்ணியதான குடிச்சிட்டு இருக்கோம்னு" மனச தேத்திட்டு இருந்தேன். ஆனா, போர் போடும்போது தண்ணீரைத் தேடி போர்வெல் கீழே போக போக அடியாழத்தில் இருக்கும் பாறைகளில் இயல்பாக இருக்கும் புளுரைடு, க்ளோரைடு, நைட்ரேட், பெர்ரஸ் போன்ற சில தனிமங்கள் நீரில் கரைந்து வந்து பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துவதாக ஆசிரியர் கூறும்போது என் அடிவயிரைப் போலவே, கண்டிப்பாக உங்களுக்கும் கலக்கும். அப்போ, தமிழக நீர்வளம், அவற்றின் வரலாறு, பண்பாடு மற்றும் தற்காலத்தில் அவற்றின் மாசுபாடு பற்றி பேசும் புத்தகம். சரிதானேனு கேக்குறீங்க? பாதி சரி. அப்போ மீதி? உயிர்களுக்கு ஆதாரமாக விளங்கும் நீர், சர்வதேச அரசியலால் பாட்டிலுக்குள் அடைப்பட்டு புட்டி நீராகும் நீர் வணிகம், தண்ணீர் அரசியல், நீர் ஏன் நீராக இருக்குனு சொல்லும் நீர் அறிவியல், வெப்ப மண்டல பகுதியைச் சேர்ந்த தமிழக மக்களின் அனைத்து சடங்கு சம்பிரதாய விழாக்களும் இயல்பாகவே நீரைச் சார்ந்து அமைய, நெருப்பு பண்பாடு உள்ளே வந்ததும், மின்சாரத்தை கடத்தாத தூய நீரில் சாதியம் கறைந்து தீட்டுக் கடத்தியாக மாறுவது, மழை உருவாகும் அறிவியல், தென்னிந்தியாவின் மழைபொழிவை பாதிக்கும் சர்வதேச புவியியல் நிகழ்வுகள், மழை, பணி, வெயில், காற்று, பருவக்காலங்கள் என அத்தனை குறித்தும் சொல்லபட்ட பழமொழிகள், தமிழக நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்ட கதைகள் என தண்ணீரின் 360 டிகிரியையும் (இது அந்த நேரெதிர் 360 டிகிரி அல்ல, மெய்யான 360 டிகிரி 😉) ஆவணப்படுத்தும் இப்புத்தகம் ஆசிரியரின் கூற்றைப் போலவே "தமிழகத்தின் தண்ணீர் ஆவணம்தான்" "நீரின்றி அமையாது உலகு" என சங்க காலத்தில் முழங்கும் திருக்குறள் முதல் சமீபத்தில் வெளியான உலக வங்கி முதலான பன்னாட்டு நிறுவனங்களின் அறிக்கை வரை, நீர் அரசியலை அலசி எடுத்துள்ள ஆசிரியர், பிரச்சனைகளை மட்டும் கூறி பாழுங்கிணற்றில் தள்ளிவிடாமல், தமிழகம் முதல், அண்டை மாநிலங்கள், அயல் நாடுகள் வரை நீர்ப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட வெற்றிக் கதைகளையும், சில பரிந்துரைகளையும் கூறி, வறண்ட நாவிற்கு உயிர் நீர் ஊற்றியுள்ளார் 🙏🏽. எல்லோரும் படித்து விழிப்புணர்வு அடைய வேண்டிய முக்கியமான புத்தகம் என்றாலும், அரசு அதிகாரிகளும் (எதிர்கால அதிகாரிகளும்), அரசியல்வாதிகளும் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம். நூல்: நீர் எழுத்து ஆசிரியர்: நக்கீரன் வெளியீடு: காடோடி விலை: 250 WhatsApp order: 8072730977

Thursday, June 16, 2022

Toilet seat

அப்பொழுது எனக்கு பனிரெண்டு வயதிருக்கும். ஒரு முன்னிரவு வேளையில், எங்கள் வீட்டிலிருந்த டிவியில் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது. "இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன 8 வயது சிறுமி, அவளது வீட்டிற்கு அருகிலுள்ள பாதளசாக்கடையில் பிணமாக கண்டெடுப்பு. பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று வீசியுள்ளதாக உடற்கூராய்வில் தகவல்" இதுதான் செய்தி. எல்லோரும் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க எனக்கு மட்டும் ஒரு சந்தேகம். பலகாரம் தெரியும். அது என்ன பலாத்காரம்? அதை செய்தால் ஏன் சாக வேண்டும்? அருகில் அமர்ந்திருந்த என்னை விட மூன்று வயது பெரியவளான அக்காவிடம் கேட்டேன். திருத்திருவென்று முழித்து விட்டு எதுவும் கூறாமல் சென்று விட்டாள். அவளுக்கும் தெரியவில்லை. அல்லது என்னிடம் எப்படி கூறுவதென்று தெரியவில்லை. பனிரெண்டு, பதினைந்து வயது சிறுமிகளான எங்களுக்கே மேற்கூறிய சம்பவம் ஒருமாதிரி புரிந்தும் புரியாமலிருக்க, பாதிக்கப்பட்ட குழந்தைக்கோ வயது எட்டு. அதை அவள் எப்படி எதிர் கொண்டிருப்பாள்? ஒருவேளை அவள் அன்று கொல்லப்படாமல் இருந்திருந்தால் வாழ்நாள் முழுவதும் இப்படி ஒரு கசப்பான அனுபவத்துடன் எப்படி வாழ்ந்திருப்பாள்? மேற்கூறிய சம்பவம் நடந்து சுமார் பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது. இன்று வரை ஏதேனும் நல்ல மாற்றங்கள் நடந்துள்ளதா? இன்னும் சொல்லப் போனால் இந்த மாதிரியான சம்பவங்கள் மேலும் அதிகரிக்கவே செய்திருக்கின்றன. அதுவும் இதை விட இன்னும் சிறிய தளிர்களுக்கு. இதில் ஆண், பெண் பாகுபாடில்லாமல் எல்லோரும் பாதிப்படைவது குறிப்பிடத்தக்கது. ஆமா. இந்த மாதிரி குற்றவாளிகளை எல்லாம் நடு ரோட்டுல நிக்க வச்சி சுடனும். இவங்களுக்கெல்லாம் கொடூரமான தண்டனை கொடுக்கணும். என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் எத்தனை பேருக்கு?அதுவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வரம்பில்லாமல்!. ஒருவேளை நீங்கள் சொல்வதுபோலவே கொடூரமான தண்டனை தான் தீர்வு எனில், இதுவரை எத்தனையோ பேருக்கு தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும், ஏன் மீண்டும் மீண்டும் இது மாதிரியான செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமிக்கின்றன? ஊடக வெளிச்சத்திற்கு/ பொதுவெளிக்கு வராதவை எத்தனை எத்தனையோ... ஒருவேளை குற்றவாளிகளின் பட்டியலில் உங்கள் தந்தையோ, கணவனோ, உடன்பிறந்தோர்களோ ஏன் நீங்களே இருந்தால்? அப்போதும் இப்படியே யோசிப்பீர்களா? ஆம். நம்மில் பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பதில் பாலியல் தொந்தரவிற்க்கு ஆளாகியிருப்போம் அல்லது சில நேரங்களில் நீங்களே யாருக்காவது இந்த மாதிரியான தொல்லைகளை ஏற்படுத்தியிருக்கலாம். பின்னர் அப்படி நடந்து கொண்டதை நினைத்து வருந்தியும் இருக்கலாம். ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருந்தாலும் இதுதான் உண்மை. இதெல்லாம் ஏன் நடக்கிறது? இதையெல்லாம் எப்படி சரி செய்வது? என்றாவது சிந்தித்தது உண்டா? தப்பு பண்ணிட்டேன் திருத்திக்கணும்னு நெனைக்கிறவங்களும், நானும் பாதிக்க பட்டிருக்கேன் அதை எப்படி எதிர்கொள்வது? நம் வீட்டு குழந்தைகளை எப்படி இதிலிருந்து காப்பது? என்று கேட்பவர்கள் மட்டும் மேற்க்கொண்டு படித்தால் போதும். ஊர்ல எங்கையோ யாருக்கோ நாலு பேருக்கு அப்படி நடக்குது அதுக்குன்னு எல்லாரையும் குத்தம் சொல்ல முடியுமானு கேக்குறவங்களுக்கும், பாலியல், காமம் இதை பற்றியெல்லாம் படிப்பதோ/தெரிந்து கொள்வதோ பாவம் என்று நினைப்பவர்களும் இதை படிக்க வேண்டாம். சரி கதைக்கு வருவோம். இதுபோல பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஏதேனும் மனநோயா? என்றால், இல்லை என்கிறார் எழுத்தாளர் லதா. பிரச்னை நம்மிடத்தில், நம் சமூகத்தில், நம் கலாச்சாரத்தில். வேர் அழுகியுள்ளபோது இலைகளுக்கு மருந்து தெளித்து என்ன பயன்? என கேட்கும் அவர், பாலியல் குற்றங்களுக்கு என்ன தீர்வு சொல்கிறார்? கணவன் மனைவி உறவு இறுதி வரை சுமூகமாக இருக்க என்ன செய்ய வேண்டும்? திருமணத்தை தாண்டிய வெளிமண உறவுகள் தவறா? பதின் பருவத்திலேயே முளைவிடத் தொடங்கும் காம ஆசைகளை எப்படி எதிர்கொள்வது? அல்லது அவற்றை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு எப்படி சொல்லி கொடுப்பது? ஆண் பெண் உறவில் ஆண்கள் பெண்களை பற்றியும், பெண்கள் ஆண்களை பற்றியும் அறிந்து கொள்ளாதது என்ன? அல்லது தவறாக புரிந்து கொண்டிருப்பது என்ன? உண்மையிலேயே திருமணம் ஒரு necessary evil தானா? இதற்கெல்லாம் அடிப்படையான காமத்தை பற்றி பேசுவதே தவறா? எல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள், ஆண்களின் 'கழிவறை இருக்கை' என ஏன் சொல்கிறார்? தெரிந்துகொள்ள எழுத்தாளர் லதா எழுதிய "கழிவறை இருக்கை" எனும் நூலை வாசியுங்கள். காமத்தை பற்றிய இதுநாள் வரையிலான உங்கள் பார்வையை சரி செய்து கொள்ளுங்கள். (குறிப்பு: நூல் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கிடைக்கிறது) #toilet_seat

இனி யாரும் இங்கே அழ வேண்டாம்

4500000000 years... என்னை மாதிரியே ஒன்று, பத்து, நூறு என எண்ணத்தொடங்கியிருப்பீங்களே!..... சரி, நானே சொல்றேன். நானூற்று ஐம்பது கோடி ஆண்டுகள். ஆம் இதைத்தான் பூமியின் வயதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சூரியனிலிருந்து பிரிந்து வந்த ஒரு சிறிய நெருப்பு துண்டு குளிர்ந்து, இறுகி, கடல், காடு, மலை என உருமாரி, பல துண்டுகளாக உடைந்து அவை நகர்ந்து கண்டங்களாகி, ஒரு செல் உயிரி, பல செல் உயிரி, மெல்லுடலி, கணுக்காலி, முதுகெலும்பு அற்றவை, முதுகெலும்பு உடையவை, முட்டையிடுபவை, பாலூட்டிகள் என நிறைய உயிர்களை ஜனித்து, டைனோசர்களை போன்று சிறியதும், அதை விட பெரியதும் என பல்வேறு விலங்குகள் தோன்றி அழிந்து, இன்னும் எத்தனை எத்தனை உயிரின வகைகளும் அவற்றின் பரிணாம வளர்ச்சியும், இறுதியாக நம் முப்பாட்டானான நியாண்டர்தால், எரக்ட்டஸ் முதல் தற்காலத்து நாம் (சேப்பியன்ஸ்) வரை பூமியின் பயணம் 450 கோடி ஆண்டுகளாக தொடர்கிறது. லைட்டா மூச்சு வாங்குதுல? எனக்கும் தான். இது மட்டுமில்ல சேப்பியன்சான நாம் கும்பலாக சுத்திட்டு, நம்முடைய முப்பாட்டன் இனக்குழுக்களுடன் சண்டையிட்டு வென்றது, பின்பு குழுக்கள் மறைந்து குலங்களாக மலர்ந்தது, அதன்பின் சிற்றரசு, பேரரசு, வல்லரசு, முடியரசு, குடியரசு என உருமாற்றமடைந்து, இடையிடையே மொழி, இனம், மதம் , நாடு, நிறம், சாதி இப்படி பல கற்பனைக் கோடுகளால் பிரிந்தது என, 20ம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தம் வரை உள்ள வரலாற்றை தெரிந்து கொள்ள நாம் எத்தனை புத்தகங்களை படிக்க வேண்டியிருக்கும்?! அதுவும், 'நமக்கு ஏன் வால் இல்ல?' 'நிலாவுக்கு கொஞ்ச நாள் கருப்பு, கொஞ்ச நாள் வெள்ளை கலர் யார் அடிக்குறா?' 'செடிக்கு எப்படி குழந்தை பொறக்குது?' இப்படியான கேள்விகளால், அரசியல்வாதிகளை துரத்தும் பத்திரிகையாளர்களைப் போல, உலகை அறிய துடிக்கும் நம் வீட்டு குழந்தைகளுக்கு இவ்வளவு வரலாற்றையும் மிக எளிமையாக விளங்க வைக்க முடியுமா? நம்மால் முடியாது. ஆனால் ஜீயோ டாமினால் முடியும். இவர் தான் "இனி யாரும் இங்கே அழ வேண்டாம்" என்ற புத்தகத்தின் ஆசிரியர். புத்தகம் வெறும் 40 பக்கங்கள் மட்டும் தான் என்பதும், இத்தனை நீண்ட வரலாற்றை எளிமையாக விளக்குவதும் இதன் சிறப்பு அம்சமாகும். சரி, இவ்வளவு நீண்ட வரலாற்றை ஏன் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும்? ஒரு யுகத்தில் உலகையே ஆண்டு கொண்டிருந்த டைனோசர்கள் அழிந்தது எப்படி? இத்தனை நெடிய வரலாற்றில் கட்ட கடைசியாக வந்த மனுச குட்டி (சேப்பியன்) பூமிக்கும், மற்ற உயிர்களுக்கும் செய்தது என்ன? வரலாறு முழுவதும் உயிர்கள் கருகும் வாசம் அடிப்பது ஏன்? போர்கள் வீரத்தின் அடையாளமா? பூவுலகின் சாபமா? யார் அந்த லிட்டில் பாய்? சசாக்கியின் காகித கொக்குகள் உலகின் அழிவு சக்திகளுக்கு சொல்வது என்ன? உலகை அழ வைப்பது எது? இனி யாரும் இங்கே அழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? தெரிந்து கொள்ள இந்த புத்தகத்தை வாசியுங்கள்.

Wednesday, June 16, 2021

வெறும் முன்னூறு ரூபாயில் இன்பச்சுற்றுலா செல்ல வேண்டுமா?


கொரோனாவின் இரண்டாவது அலை  தீவிரமாக பரவிக் கொண்டிருந்த காலம் அது. "மருத்துவமனைகளில் இடம் இல்லைஅவசரமாக ஆக்சிஜன் சிலிண்டர் தேவைஇடுகாட்டில் இடம் இல்லாததால் சடலங்கள் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன"போன்ற அறிவிப்புகளே எங்கும் நிறைந்திருந்ததுபோதாக்கு றைக்கு நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் தினமும் ஒரு இறப்பு செய்தியை தெரிவித்துக் கொண்டிருந்தனர். பயமும் மனஉளைச்சலும் தொற்றிக் கொள்ள, அதிலிருந்து விடுபட நிறைய மறதியும் கொஞ்சம் அமைதியும் தேவைப்பட்டது. அவ்வளவு தான் போர்னியா தீவு என்னை வாரி அணைத்துக் கொண்டது. கடவுச் சீட்டு இல்லையென்றேன்; வேண்டாம் என்றது. இபாஸ் இல்லையென்றேன்; தேவையில்லை என்றதுபிறகு எதற்கு தாமதம்? கிளம்பலாமா?


ரசோங் குரங்கு
அதுதான் என் முதல் படகு பயணம். கினபத்தாங்கன் நதியின் நீண்ட படகு பயணத்தை தொடங்கும் முன், மிக நீண்ட சாலை பயணத்தையும் முடிக்க வேண்டியிருந்தது. கினபத்தாங்கனிலிருந்து வடக்கு நோக்கி திரும்பி லோக்கன் ஆற்றின் மீது மிதக்க தொடங்கியிருந்தது படகுஇருபுறமும் மரங்களடர்ந்த பொள்ளாச்சி - ஆனைமலை சாலையில் பயணம் செய்யும் போதெல்லாம் அதன் எழிலில் மயங்கி வண்டியில் ஊர்ந்து செல்லும் எனக்கு லோக்கன் இன்ப அதிர்ச்சி தந்தது. ஆற்றின் இருபுறமும் இருந்த அடர்ந்த மரங்கள் லோக்கனை வெயிலுக்கு காட்டாமல் வளர்த்துக் கொண்டிருந்தன. லோக்கனின் வழிப்பாதையை தவிர எங்கு திரும்பினும் பசுமை. பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த பறவை ஆர்வாலர்கள் வந்தால் கூட எந்த புள்ளினத்தின் ஒலி இது என்று பிரித்தறிய முடியாத அளவிற்கு கலவையான ஒலிகளால் கானகம் நிரம்பியிருந்தது. ஆனால் லோக்கனோ அதன் ஆழத்தில் கொஞ்சி விளையாடும் மீன்களை கண்ணாடிபோல் தெளிவாக காட்டி அமைதியாக சென்று கொண்டிருந்தது. லோக்கனின் தாகம் தீர்க்கும் பல ஓடைகளில் ஒன்று இடப்பக்கமாக மேற்கிலிருந்து ஓடிவந்து கலந்தது. இதற்கு மேல் படகு செல்லாது. இனி காணப்போவதெல்லாம் காடு காடு காடு மட்டும் தான். கொரோனாவினால் ஏற்பட்ட வலி கரைந்து கொண்டிருந்த தருணம் அது.   

தனியாக தான் போனேன். ஆனால் அங்கு சென்றதும் முதலில் துவான் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். பின் ஒமர் வந்தார். யுவன்னா, இல்லை அன்னா வந்தாள். ஜோஸ்சும் எங்களுடன் சேர்ந்து கொண்டான். காடுகள் ஒளித்து வைத்திருந்த ஆர்மோனியப் பெட்டியை கண்டெடுக்க அவனே கற்றுக் கொடுத்தான். ஜோஸ்ஸின் சொந்தக்காரி ரலாவின் பாடல்களுக்கு இசை கருவிகளே தேவையில்லை. இவர்களுடன் ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேலும் சிலர். அப்புறம் பிலியவ். 'எனக்கு வண்டியில் பயணம் செய்ய தெரியாது' எனக் கூறி என் பேரன்புகளை  பிடுங்கி சென்றவர். படேல் சிலையருகே பாதங்களுக்கு பக்கத்தில் மோடி நிற்பது போன்ற காட்சியில்  மூதாய் மரத்தையும் என்னையும் பொருத்திக் கொண்டிருந்த வேளையில் ஒமர் சொன்னார், உலகில் இவ்வளவு உயரமான மரவகைகள் அமேசான், ஆப்பிரிக்க காடுகளில் கூட கிடையாது. என்னையும் அறியாமல் என் தலை அதை ஆமோதித்து அசைந்து கொண்டிருந்தது. எங்களுடன் வா! நீ காண வேண்டியது நிறைய உள்ளது என்று ஜோஸ் சொல்லி முடிப்பதற்குள் நான் தயாரான வேகத்தைப் பார்த்து அனைவரும் வெடித்து சிரித்தனர்

ஐம்பூதங்களில் மூன்றிற்கு காடு சம்பளத்துடன் கூடிய கால வரையறையற்ற விடுப்பு கொடுத்து விட்டது போலும். கண்ணுலையே படல. நிஜமாகத்தான் சொல்றேன். பல நூற்றாண்டுகளாய் சேமித்த இலை மேல்மண் மக்குகளால் சில அடி உயரம் வரை மூடப்பட்டிருந்த நிலம். ஓங்கியுயர்ந்து அடர்ந்து படர்ந்து வளர்ந்த மரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஆகாயம். சூரிய ஒளி புகமுடியாததனால் வெப்பத்திற்கு (நெருப்பு) தடை. ஆனால் வளிக்கும் (காற்று), அதனை குளிரூட்டும் சிற்றோடைகளுக்கும், குளங்களுக்கு (நீர்) மட்டும் ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்டும் வேலை. இப்படி அடர் வனத்தின் குளிர்ந்த கவிகையில் மூன்று நாட்கள் நீந்திக் கொண்டிருந்தேன்.


நான் பார்த்ததையெல்லாம் சொன்னால் நீங்கள் எல்லாரும் உடனே கிளம்பி அங்க போயிருவீங்க...கொஞ்சம் பயண களைப்பில் இருந்தாலும் உங்களுக்காக சில விஷயங்களை மட்டும் சொல்றேன்..... நம்ம ஊருல இருக்குற குரங்குகளெல்லாம் ஒரு மாறி மரப்பட்டை கலர்ல தான இருக்கும். இங்க அடர் செம்மஞ்சள் கலர்ல ஒரு குரங்கை பாத்தேன். அதுக்கு மூக்கு வேற தும்பிக்கை மாதிரி இருக்கு. ஒமரிடம் கேட்டேன், ரசோங் குரங்குகளாம். இங்கு தவிர உலகில் வேறு எங்கும் இல்லையாம்.
காட்டின் தாவரவியலையும், விலங்கியலையும் கரைத்து குடித்திருந்த ஒமர்தான் அந்த மூன்று நாட்களுக்கும் என் ஆசான். அதைப் போலவே உலகிலேயே மிகச் சிறிய குளம்புள்ள பாலூட்டியான கூரன் பன்றி, குள்ள யானை, வேதிவால் குருவி, இருவாசி பறவைகள், லயாங் லயாங் குருவி, பறக்கும் பாம்பு, பறக்கும் தவளை, பறக்கும் அணில், உராங் ஊத்தான், ஐந்தடி உயரமுள்ள தேன்கூடு, ஓரடி நீளமுள்ள குச்சிப் பூச்சி, பல அடி நீளமுள்ள மலைப்பாம்பு, டைனோசர் காலத்து தொன்மையான துபையா, தேன் குடிக்கும் ஒளவால்பெர்பாஞ்சாட் எனும் தொடை பருமனுள்ள காட்டு கொடி, பகட்டு கோழி, தாடி பன்றி, தெம்படாவ், பன்றிவால் குரங்கு, சாம்பல் குரங்கு, கலோய் மீன், சும்பித்தான்.......  ஆமாங்க ...இந்த பட்டியல் சற்று நீளமானது தான்.. 

நாற்பத்தினான்கு 
விலங்கு
   காட்டுன்னா பல்வேறு மரங்களும் உயிரினங்களும் இருப்பது இயல்பு தானேனு நீங்க நினைக்கிறது கேக்குது... ஆனா மற்ற காடுகளில் இருப்பது போன்று அல்ல. நான் வாசித்த பட்டியலில் பெரும்பாலானவை ஓரிடவாழ்வி. இந்த காட்டை தவிர உலகில் வேறு எங்கேயும் இவற்றை காண முடியாது. இந்த காட்டை பற்றிய மேலும் ஒரு சுவையான உண்மையை ஒமர் என்னிடம் கூறினார். நான் உங்களிடம் கூறுகிறேன். குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதை நாம் அறிவோம். அந்த குரங்கு இனத்திற்கே முன்னோடியாக உள்ள விலங்குகளை  பிரைமேட் என்று கூறுவார்களாம். அது உலகெங்கிலும் பரவி இருந்தாலும் சுமார் பத்து பிரைமேட்கள் ஒன்றாக இந்த காட்டில் உள்ளதாம். ஆம். நம் பத்து முப்பாட்டனையும் நான் பார்த்து விட்டேன்அதில் ஒன்று தான் நாற்பத்தினான்கு விலங்குஅந்த விலங்கில் ஆந்தையின் கண்கள், வௌவாளின் காதுகள், குரங்கின் வால், தவளையின் கால் என  44 வகையான விலங்குகளின் உறுப்புகள் இருந்தது. நான் மெரண்டுட்டேன்இறுதியாக,கதிரவன் கரையும் நேரத்தில், உலகிலேயே வௌவால்கள் அதிகம் வசிக்கும் கோமதோங் குகையிலிருந்து  பல ஆயிரம் வௌவால்கள் வெளியேறிய காட்சியும், கோடான கோடி மலர்கள் ஒரே சமயத்தில் மலர்ந்திருந்த காட்சியும் இந்த பயணத்தில் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதது.......
குகையிலிருந்து வௌவால்கள்
வெளியேறும் காட்சி 

 உங்களுக்கும் அங்க போகணும்னு தோணுதா?இந்த பெருந்தொற்று காலத்திலும் இது சாத்தியமாகுமானு சந்தேகமா இருக்கா? அதுவும் வெறும் முன்னூறு ரூபாயில்.சாத்தியம்தான் நக்கீரனின் காடோடி நாவலை வாசித்தால்ஆமாங்க. இவ்வளவு நேரமும் நான் படித்த காடோடியில் உள்ள போர்னியா தீவைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தேனே தவிர நான் சென்று வந்ததை பற்றி அல்ல. கதையை சொல்லும் துவான், என் கையை பிடித்துக் கொண்டு கூட்டிப்போகும் உணர்வை அவர் எழுத்தில் தோய்த்திருந்தார் நக்கீரன்.

இக்கதை போர்னியாவைப் பற்றியது அல்ல. அங்கு வாழும் வாலில்லாக் குரங்குகள் பற்றியும் அல்ல. அங்குள்ள குளங்களிலும் அருவிகளையும் வளர்க்கும் ஓடைகளை பற்றியும் அல்லகாடுகளை போற்றி பாதுகாத்து வாழும் திடோங், முருட் இனங்களை பற்றியதும் அல்ல. காட்டிலுள்ள மரங்களிடம் உரையாடும் பிலியவ் பற்றியும் அல்ல.மரங்களினுள் வாழும் கொற்றவை பற்றியும் அல்லஅந்த கொற்றவையை கொல்ல வரும் வெட்டுமர கம்பனியை பற்றியதும் அல்ல. தன்னை வாழ வைக்கும் காட்டின் அழிவிற்காக கவலைப்படும் பகட்டு கோழியை பற்றியதும் அல்ல. மொத்த காடும் அழிந்து போர்க்களத்தின் இறுதி காட்சியை நினைவுறுத்திக் கொண்டிருக்கையில், மூதாய் மரத்தின் வெட்டப்பட்ட அடிமரத்தின் அருகில் சென்று, உரிந்த பட்டையை தடவி வலிக்கிறதா? என கேட்ட துவானைப் பற்றியும் அல்ல.   எதைப் பற்றியும் கவலைப்படாமல் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் பற்றியது. குரங்கின் மூளையை உயிருடன் சுவைக்கும் இரக்கமில்லாதவர்கள்  பற்றியது. எதற்கு வாங்குகிறோமென தெரியாமலே பொருட்களை வாங்கி குவிக்கும் பேராசைக்காரர்கள் பற்றியது. ஆம் நம்மை பற்றியது. என்னைப் பற்றியது.


புத்தகம் வாங்க: 8072730977




        - காற்றி

16.06.2021