Thursday, June 16, 2022
இனி யாரும் இங்கே அழ வேண்டாம்
4500000000 years...
என்னை மாதிரியே ஒன்று, பத்து, நூறு என எண்ணத்தொடங்கியிருப்பீங்களே!.....
சரி, நானே சொல்றேன். நானூற்று ஐம்பது கோடி ஆண்டுகள். ஆம் இதைத்தான் பூமியின் வயதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சூரியனிலிருந்து பிரிந்து வந்த ஒரு சிறிய நெருப்பு துண்டு குளிர்ந்து, இறுகி, கடல், காடு, மலை என உருமாரி, பல துண்டுகளாக உடைந்து அவை நகர்ந்து கண்டங்களாகி, ஒரு செல் உயிரி, பல செல் உயிரி, மெல்லுடலி, கணுக்காலி, முதுகெலும்பு அற்றவை, முதுகெலும்பு உடையவை, முட்டையிடுபவை, பாலூட்டிகள் என நிறைய உயிர்களை ஜனித்து, டைனோசர்களை போன்று சிறியதும், அதை விட பெரியதும் என பல்வேறு விலங்குகள் தோன்றி அழிந்து, இன்னும் எத்தனை எத்தனை உயிரின வகைகளும் அவற்றின் பரிணாம வளர்ச்சியும், இறுதியாக நம் முப்பாட்டானான நியாண்டர்தால், எரக்ட்டஸ் முதல் தற்காலத்து நாம் (சேப்பியன்ஸ்) வரை பூமியின் பயணம் 450 கோடி ஆண்டுகளாக தொடர்கிறது. லைட்டா மூச்சு வாங்குதுல? எனக்கும் தான். இது மட்டுமில்ல சேப்பியன்சான நாம் கும்பலாக சுத்திட்டு, நம்முடைய முப்பாட்டன் இனக்குழுக்களுடன் சண்டையிட்டு வென்றது, பின்பு குழுக்கள் மறைந்து குலங்களாக மலர்ந்தது, அதன்பின் சிற்றரசு, பேரரசு, வல்லரசு, முடியரசு, குடியரசு என உருமாற்றமடைந்து, இடையிடையே மொழி, இனம், மதம் , நாடு, நிறம், சாதி இப்படி பல கற்பனைக் கோடுகளால் பிரிந்தது என, 20ம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தம் வரை உள்ள வரலாற்றை தெரிந்து கொள்ள நாம் எத்தனை புத்தகங்களை படிக்க வேண்டியிருக்கும்?!
அதுவும்,
'நமக்கு ஏன் வால் இல்ல?'
'நிலாவுக்கு கொஞ்ச நாள் கருப்பு, கொஞ்ச நாள் வெள்ளை கலர் யார் அடிக்குறா?'
'செடிக்கு எப்படி குழந்தை பொறக்குது?'
இப்படியான கேள்விகளால், அரசியல்வாதிகளை துரத்தும் பத்திரிகையாளர்களைப் போல, உலகை அறிய துடிக்கும் நம் வீட்டு குழந்தைகளுக்கு இவ்வளவு வரலாற்றையும் மிக எளிமையாக விளங்க வைக்க முடியுமா?
நம்மால் முடியாது. ஆனால் ஜீயோ டாமினால் முடியும். இவர் தான் "இனி யாரும் இங்கே அழ வேண்டாம்" என்ற புத்தகத்தின் ஆசிரியர். புத்தகம் வெறும் 40 பக்கங்கள் மட்டும் தான் என்பதும், இத்தனை நீண்ட வரலாற்றை எளிமையாக விளக்குவதும் இதன் சிறப்பு அம்சமாகும்.
சரி, இவ்வளவு நீண்ட வரலாற்றை ஏன் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும்?
ஒரு யுகத்தில் உலகையே ஆண்டு கொண்டிருந்த டைனோசர்கள் அழிந்தது எப்படி?
இத்தனை நெடிய வரலாற்றில் கட்ட கடைசியாக வந்த மனுச குட்டி (சேப்பியன்) பூமிக்கும், மற்ற உயிர்களுக்கும் செய்தது என்ன?
வரலாறு முழுவதும் உயிர்கள் கருகும் வாசம் அடிப்பது ஏன்?
போர்கள் வீரத்தின் அடையாளமா? பூவுலகின் சாபமா?
யார் அந்த லிட்டில் பாய்?
சசாக்கியின் காகித கொக்குகள் உலகின் அழிவு சக்திகளுக்கு சொல்வது என்ன?
உலகை அழ வைப்பது எது? இனி யாரும் இங்கே அழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
தெரிந்து கொள்ள இந்த புத்தகத்தை வாசியுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment