Sunday, June 14, 2020

நூல் அறிமுகம்

வணக்கம். இந்த கட்டுரை ஒரு புத்தகத்திற்கான அறிமுக உறை. இதனை நான் கென் சாரோ விவாவிற்கு சமர்ப்பிக்கிறேன். இவர்தான் கண்டலை காப்பாற்ற தன் உயிரை ஈன்ற நைஜீரிய எழுத்தாளரும், சுற்றுச் சூழல் ஆர்வாளரும் ஆவார்.


கென் சாரோ விவோ


கண்டலா! அப்படீனா?
கண்டல் தெரியாதா? அதான் நெய்தலிலும் (நீர்) இல்லாமல், முல்லையிலும் (நிலம்) இல்லாமல் இடையில் (தமிழன்பர்கள் இதனை திணை மயக்கம் என்பர்) வளரும் காடுகள். சரி தெளிவாகவே கூறுகிறேன் கடலோர காடுகளான சதுப்பு நிலக் காடுகளை தான் சங்க இலக்கியங்கள் கண்டல் என விளிக்கின்றன. ஆசிரியர் இதனை அலையாத்திக்காடுகள் என அறிமுகப்படுத்துகிறார். அதாவது கடல் அலைகளின் சீற்றத்தை 90 விழுக்காடு அளவிற்கு குறைத்துவிடுவதால் இப்பெயர் பெற்றது. உதராணமாக பிச்சாவரம், முத்துப் பேட்டை மற்றும் சுந்தரவனக் காடுகளை கூறலாம்.

பிச்சாவரம் அலையாத்திக்காடு
 சரி எல்லா காடுகளை போலத்தானே இதுவும், இதற்கு எதற்கு ஒரு புத்தகம், இப்படி ஒரு அறிமுக கட்டுரை? அதுவும் இதை காப்பற்ற கென் தன் உயிரை வேற விட்ருக்காருனு கேக்குறீங்களா? இதே கேள்வியுடன் தான் நானும் இந்த புத்தகத்தை புரட்டினேன். விடைகள் வியப்பையும், குற்ற உணர்ச்சியையும் ஒருங்கே தருகின்றன.

          கடல் நீரும், ஆற்று நீரும் கலக்கும் கழிமுகங்கள் தான் இந்த அலையாத்திக் காடுகளின் இருப்பிடம். புயற்காற்றின் தொடக்க விளையாட்டுக் களமான கடற்கரையோரத்தில் இம்மரங்கள் எப்படி ஈடு கொடுத்து வளர்கின்றன, அதுவும் அங்குள்ள உப்புத் தன்மையை தாங்கி.  இதுவரை நாம் படித்திராத தாவரவியல் பாடத்தை நடத்துகிறார் ஆசிரியர். அதிலும் உப்பை இலையின் வழியே வெளியேற்றும் வெண்கண்டல், சேய் முளைப்பு முறை (தாய் மரத்தில் கனிகள் இணைந்திருக்கும் போதேவித்துக்கள் முளைப்பது) மூலம் இனப்பெருக்கம் செய்யும் சுரபுன்னை, மூச்சுவிடுவதற்கு பிரத்யேக வேர்களை கொண்ட தோதுபட்டகழி, பன்னுக்குச்சி போன்றவை ஆஹா ரகம் என்றால், இரத்த அழுத்தம் குறைப்பது, வயிற்றுப் போக்கை தடுப்பது, எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துவது போன்ற இதன் மருத்துவ குணங்கள் ஓஹோ ரகம் 👌

          சரி இம்மாதிரியான மருத்துவக் குணங்களும், தனி தாவரவியல் பண்புகளும் வேறுசில தாவரங்களுக்களுக்கும் இருக்காதானே செய்கிறது? இதிலென்ன சிறப்பு எனக் கேட்டால், இந்த அலையாத்திக்காடுகள் தான் கடல்வாழ் உயிர்களின் தொட்டில் எனவும், கடலின் விருந்து எனவும் கூறி ஆச்சரியப்படுத்துகிறார் ஆசிரியர். தொட்டிலா? எப்படி? 
கடல் வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்கு, குஞ்சு பொறிப்பதற்கு, பொறித்த குஞ்சுகள் வளர்வதற்கு இப்படி பல செயல்களுக்கு கடல் உயிர்களின் ஒரே தாய் வீடு இந்த கண்டல் நிலம் தான். 'நா தனி ஆள் இல்ல' என்ற தல அஜீத் பாணியில் கண்டலில் 100 வகையான தாவரங்களும் அதை சார்ந்து வாழும் 12 ஒட்டுயிர்த் தாவரங்களும் இருக்கின்றன. இதனை நம்பி 55 இறால் இனங்கள், 138 நண்டு வகைகள், 546 மீன் இனங்கள், 308 நத்தையினங்கள், 7 மீன் ஒட்டுண்ணிகள், 13 நீர்நில வாழ்வன, 11 வகை கடற்புற்கள், 559 பாசி மிதவை வகைகள், பல்சுனைப்புழுக்களும் உள்ளன. இதனால் பயனடையும் பறவை இனங்களின் பட்டியலோ இன்னும் நீளம். 

        ஒவ்வொரு வகை மரமும் அதனை சார்ந்து வாழும் பிரத்யேக கடல்வாழ் உயிரிக்கு அடைக்கலமாக விளங்குகிறது. அதாவது குறிப்பிட்ட அந்த வகை மரத்தின் அழிவு அதனை சார்ந்து வாழும் கடல் வாழ் உயிரின் அழிவிற்கு ஒப்பாகும். இதனை, முன்பு அதிகம் கிடைத்த ஆனால், இப்போது அருகி விட்ட சென்னாகுன்னி மீன்களுடன் ஒப்பிட்டு அச்சத்தை ஏற்படுத்துகிறார் ஆசிரியர். இது ஒரு உதாரணம் மட்டுமே.
சென்னாகுன்னி மீன்

        வணிக ரீதியான பலன்களை அளிப்பதிலும் கொஞ்சமும் சலைத்தவை அல்ல அ.காடுகள் என வாதிடும் ஆசிரியர், அவற்றின் அழிவு, கடல் உணவான 80 விழுக்காடு மீன்களின் அழிவிற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கும் ஆசிரியர், நஞ்சுத் தன்மை வாய்ந்த இழுது மீன்களின் கூட்டம் அதிகரிக்கும் எனவும் கூறுகிறார். 

         பருவநிலை மாற்றத்திற்கான இயற்கையின் தீர்வாக இந்த அலையாத்திக் காடுகள் உள்ள போதிலும், அதனால் பலியாக போகும் முதல் ஆடும் இந்த அலையாத்திக் காடுகள் தான் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்நிலையில் வேளாண் கழிவுகள், இறால் பண்ணைகள், கடலோர செயற்கை துறைமுகங்களின் உருவாக்கம், கழிவுகளை கொட்டுதல் போன்ற நிகழ்வுகள் அ.காடுகளின் அழிவை துரிதப்படுத்துகின்றன. அதிலும் அனல்மின் நிலையங்கள் தான் இதில் முக்கியமான (மெயின்) வில்லன். 
அனல்மின் நிலையம் 

       அனல்மின் நிலையங்களின் முதன்மை இடுபொருள் நிலக்கரி. அதன் கழிவுகளில் ஒன்று பாதரசம். இந்த பாதரச கழிவு எப்படி ஜப்பானில் 'மினமெட்டா' நோயை ஏற்படுத்தி பதறவைத்தது என்பது உலகறிந்த உண்மை. தமிழகத்தின் பிச்சாவரத்திற்கும் முத்துப்பேட்டைக்கும் இடையேயான கடற்கரைப் பகுதியில் மேலும் 12 அனல்மின் நிலையங்கள் (புத்தகம் வெளியிட்ட சமயத்தில்) அமைய உள்ளன என்பது தான் அதிர்ச்சி தகவல். இந்த அனல் மின்நிலையங்கள் எப்படி மீன்வளத்தையும் அ.காடுகளையும் அழிக்கிறது என ஆசிரியர் மேலும் விளக்கும் போது ஒரு வித பதற்றம் நம்மை தொற்றிக் கொள்வதை தவிர்க்க முடியாது. நீடித்த நிலையான வளர்ச்சியும், சூழலுக்குந்த அறிவியல் கண்டுபிடிப்பிகளையும் தீர்வாக வைத்து புத்தகத்தை முடிக்கிறார் ஆசிரியர்.
மொத்தத்தில் சூழலியல் ஆர்வாளர்கள் மட்டுமல்ல, மனிதகுல நல விரும்பிகள் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். வாசிப்பதுடன் நில்லாமல் அதற்கான தீர்வுகளை நோக்கி இச்சமுதாயத்தை நகர்த்துவதில் ஒரு சிறு துரும்பையேனும் கிள்ளி போட வேண்டும்.
                                                                                                               
                                                                                                         - சமூக அக்கறையுடன்  
                                                                                                            உங்கள் காற்றி  ✒

நூலின் விவரம்
தலைப்பு: அலையாத்திக்காடுகளும் அனல்மின் நிலையங்களும்
ஆசிரியர்: நக்கீரன்
விலை: 40
                                             வெளியீடு: கொம்பு



5 comments: