கடந்த ஆண்டில் சாதியைப் பற்றி கருத்து கூறிய இருவரின் பேச்சு மிகவும் சர்ச்சைக்குள்ளாகியது. ஒருவர் "நான் பிறப்பால் ஒரு பிராமண பெண், என் தொழில் வாயால் வடை சுடுவது, அதற்காக நான் பெருமைப்படுகிறேன்" என உளறிய மதுவந்தி. மேலும் பூவில் சாதியுள்ளது, நாயில் சாதியுள்ளது என கூறி எரிச்சலூட்டினார். மற்றொருவர், "தோசையில் சாதியுள்ளது" எனக்கூறிய தோழர். மதிமாறன். அந்த நேரத்தில் அவர்களின் பேச்சு எனக்கு வேடிக்கையாகவே இருந்தது. அனால் அதில் உள்ள உண்மையானது என்னை வியப்படைய செய்துள்ளது. பூவில், நாயில் மட்டுமல்ல பறவையில், விலங்குகளில், தாவரங்களில் அவ்வளவு ஏன் திசையிலும், காற்றிலும் கூட சாதி கலந்துள்ளதையும், இப்படி கலந்து விட்டவர்களின் கதையை வரலாற்று உண்மைகளுடன் எடுத்து கூறுகிறார் நம் ஆசிரியர்.
யார் இவர்கள்?
எங்கிருந்து வந்தார்கள்?
உலகில் வேறெங்கும் இல்லாத சாதி முறையை இங்கு புகுத்தியதன் மூலம் அவர்கள் பெற்ற/பெற்றுக்கொண்டிருக்கிற நன்மைகள் என்ன?
இதனால் தொல் குடியான தமிழ் சமுதாயம் அடைந்த பேரிழப்புகள் என்ன?
ஒரு படத்தின் நகைக்சுவை காட்சியில் நடிகர் தாடி பாலாஜி விவேக்கிடம் சொல்லுவார், என் உடம்பில் உள்ள எல்ல நோய்களும் குணமாக ஒரே ஒரு மாத்திரை வேண்டுமென்று, அப்படி மேற்கூறிய அத்தனை கேள்விகளுக்கும் ஒரே விடையாக "சூழலும் சாதியும்" புத்தகத்தை அளித்துள்ளார் எழுத்தாளர் நக்கீரன் அவர்கள். தற்போதைய சூழலில் எளிய மக்களின் இருத்தலை அச்சுறுத்திக் கொண்டேயிருப்பது இரண்டு. ஒன்று "சாதியம்" மற்றொன்று "காலநிலை மாற்றம்" (சூழலியம்). இந்த இரட்டைக் குழல் துப்பாக்கியின் தாக்குதலை தனி தனியே எதிர்ப்பவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும், அவற்றை தன் எழுத்தாணியின் முனையால் ஒரு சேர முறியடிக்கும் ஆற்றல் நக்கீரனுக்கு மட்டுமே உள்ளது.
"நான் பேசவே கூச்சப்படும் ஒரு சொல் சாதி" எனும் தொடருடன் தொடங்குகிறது இந்த புத்தகம். பேச கூச்சமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு அதை உடற் கூராய்வு செய்வதில் முனைவர் பட்டம் பெற முயற்ச்சித்து அதில் வெற்றியும் பெறுகிறார் ஆசிரியர். 'சாதி' என்பது சொல் தமிழ் சொல் இல்லை என்பதில் தொடங்கி, அது தென்னாட்டிலும் தமிழ் சூழலிலும் நுழைந்த விதம், அதை பரப்ப சூழலியத்தை துணையாக கொண்ட பார்ப்பனியத்தின் உத்தி, தீண்டாமையை அதன் நவீன கால வடிவம் வரை ஆதாரங்களுடன் விவரிக்கையில் கொஞ்சம் ஆடித்தான் போனேன். அதிலும் சாதியெனும் சமமற்ற கோபுரம், திராவிட நிறமான கறுப்பின் வெறுப்பின் மீது கட்டியெழுப்பபட்டுள்ள உண்மை வருத்தத்துடன் கலந்த கோவத்தை ஏற்படுத்துகிறது. நான் ஒரு புத்தகத்தை படிக்கும் பொழுது எனக்கு மிகவும் பிடித்த/புதிதாக உள்ள/ என் கருத்தோடு ஒத்துப்போகிற வாக்கியங்களை அடிக்கோடிட்டு குறிப்பெடுத்து வைப்பேன். அப்படியே இப்புத்தகத்திற்கும் குறிப்பெடுத்த பின்பு தான் தெரிந்தது, புத்தகத்தை கையெழுத்து பிரதியெடுத்தது போல ஆகிவிட்டதென்று. அந்த அளவுக்கு புதிய தகவல்களும், அறிவுக்கு ஒப்பானதாகவும் கூறப்பட்டிருப்பது இந்நூலின்/ஆசிரியரின் சிறப்பாக நான் கருதுகிறேன்.
என்னை கவனப்படுத்திய பல வரிகளில் சில,
"கருப்பாக இருப்பதும் இயல்பாக இருப்பதும் ஏன் இழிவின் அடையாளத்தை பெற வேண்டும்?"
"மனுவின் (இந்த மனுவிற்கு எதிராகத்தான் காத்திரமான சண்டையை செய்துகொண்டிருக்கிறார் திருமா) கூற்றின் படி தமிழர்களும், தமிழ்நாடும் மிலேச்சர்கள்/அந்நியர்கள்/அசுத்தமானவர்கள்/ சூத்திரர்கள்."
"இந்துக்கள், இந்துஸ்தானத்திற்கு இடம் பெயர்ந்து வரவில்லை, மாறாக ஆர்டிக் பகுதிதான் இந்துக்களை இந்துஸ்தானத்தில் விட்டுவிட்டு சென்று விட்டது." - கோல்வார்க்கர் (Me: முடியல...முடியல....)
"இயற்கையின் எதிரியே பிரம்மம்"
"இந்திய மானுடவியல் ஆய்வுகளில் தலித் குடியிருப்புகள் ஊருக்கு கிழக்கிலேயே அமைந்திருப்பது தெரிய வந்தது. ஒரு வேலை மேல்பகுதியில் இருந்திருந்தால் மேற்கிலிருந்து கிழக்காக வீசும் காற்று உயர் சாதியினரைத் தீட்டாக்கியிருக்கும். உயர் சாதியினரால் காற்றடிக்கும் திசையை கட்டுப்படுத்த முடியாது என்பதால், சமூக உருவியலை மாற்றி அமைத்துள்ளனர்."
"தமிழர்களுக்கு வடக்கிலிருந்து காற்று வந்தால் கூட பிடிக்கவில்லை"
"பசு என்பது தூய்மைக்கும் பார்ப்பனருக்கும் குறியீடு, குதிரையோ அதிகாரத்துக்கும் சத்திரியருக்கும் குறியீட, நாய் அழுக்கு மற்றும் கீழ்சாதி குறியீடு"
"பார்ப்பனருக்கு எதிராக குசு விடுபவர் குதத்தை துண்டிக்க வேண்டும் என்கிறார் மனு"
"மக்கள் தொகை கணக்கெடுப்பு குழு, தமிழ்நாட்டில் சத்ரியர்களே கிடையாது என்று அறிவித்து விடாது தான் பரிதாபம்"
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற மனநிலையில் வாழ்கிறவர்களே ஒரு பிறப்பாளர். தமிழர்கள் ஒரு பிறப்பாளர்."
வேளாண் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்ற மாணவியாக இதை ஒரு புத்தகமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது ஒரு ஆராய்ச்சி கட்டுரை அதிலும் ஆங்கிலத்தில் 'Review article' என்று குறிப்பிடப்படும் வகையை சார்ந்தது. புத்தகத்தில் உள்ள அத்துணை தகவல்களும் புராணங்கள், இதிகாசங்கள், உபநிடதங்கள், மனு சாஸ்திரம், கல்வெட்டுகள், ஆராய்ச்சி நூல்கள், தமிழறிஞர்களின் கூற்றுகள், வெளிநாட்டு விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள், சமூக நீதி போராளிகள், இந்துத்துவ பற்றாளர்களின் கூற்றுகளிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளன. அதனால் இதனை 'மினி வரலாற்று பெட்டகம் என கூறலாம்'. பயிரைத்தாக்கும் களைச் செடியை அழிக்க அதை வேரோடு அகற்ற வேண்டுமென வேளாண் அறிவியலில் கூறுவார்கள். அதுபோல சாதியை ஒழிக்கும் இம்மாபெரும் பணிக்கு, வேரோடு தான் அடையாளங்காண வேண்டும் எனும் பெரியாரிய பாணியில் நக்கீரனின் இப்புத்தகமானது சமத்துவ சமுதாயத்தை விரும்புவர்களுக்கானது.
புத்தக தேவைக்கு :
தலைப்பு:சூழலும் சாதியும் பதிப்பகம்: காடோடி பக்கங்கள்: 88 விலை: 80 வாங்க: 8072730877




கண்டிப்பா நானும் படிக்குறேன்...
ReplyDeleteஅருமை. உங்களது ஒப்பீடு மற்றும் உங்களை கவனப்படுத்திய வரிகள் ஆழம் மிகுந்த வரிகள்.
ReplyDeleteமுழுவதும் படித்து அறிய ஆசையாக உள்ளது
ReplyDelete