Friday, June 11, 2021

வெள்ளத்தில் சென்னை மூழ்கிவிடாமல் இலவசப் பேருந்து பயணம் காப்பாற்றுமா?

 

தமிழகத்தில் ஸ்டாலினின் தலைமையிலான புதிய மாநில அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் செய்யலாம் என்று வெளியிட்டுள்ள உத்தரவு முக்கியமானது. இதனால் தினக்கூலிக்கும், குறைந்த ஊதியத்திற்கும் வேலை செய்யும் பெண்களின் வாழ்க்கையில் ஏற்படும் நன்மைகள் அதிகமிருக்கும்.பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம் அவர்களுடைய முன்னேற்றதுடன் தொடர்புடையது என்பதில் சந்தேகமில்லை. அதேநேரம் இந்த அறிவிப்பு பருவநிலை மாற்றதுடன் பிணைக்கப்பட்டுள்ளது, தெரியுமா?

எதிர்காலத்தில் பருவநிலை மாற்றத்தால் வெள்ளம், புயல், கடல் ஊருக்குள் புகுதல் போன்றவற்றால் சென்னையின் கரையோரப் பகுதிகள் நிரந்தரமாக நீரில் மூழ்கிவிடப் போவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். இதை இலவசப் பேருந்து பயணம் தடுத்து நிறுத்துவதற்கு சாத்தியம் உண்டு. அது எப்படி? சற்று விரிவாக பாப்போம்.

புவி வெப்பமும் பாரிஸ் மாநாடும்

19ஆம் நூற்றாண்டில் தீவிரமடைந்த தொழிற்புரட்சிக்கு பிறகு பூமியின் வெப்பநிலை உயர்ந்துகொண்டே வருகிறது. அதன் விளைவாகக் கடும் வறட்சி, பெரு வெள்ளங்கள், தீவிர புயல்கள், துருவ பகுதியில்லுள்ள பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்டம் உயர்தல் போன்றவை அதிகரித்துவருகின்றன. இதன் தீவிரத்தை உணர்ந்த உலக நாடுகள் 2015ம் ஆண்டு பாரிசில் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டை கூட்டினர். பருவநிலை மாற்றத்திற்குக் காரணமான புவி வெப்பமாதலை குறைக்க கரியமில வாயுக்களின் வெளியீட்டை குறைக்க வேண்டுமென்பதே மாநாட்டின் நோக்கம்.தொழில்மயமாதலுக்கு பின்பு புவியின் சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இலக்கு. ஆனால் புவியின் சராசரி வெப்பநிலை ஏற்கெனவே 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்டது. இதே நிலை நீடித்தால் 12 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்சியஸ் அளவை எட்டிவிடும். நூற்றாண்டின் இறுதியில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.


இது குறித்து 11,000 அறிவியலாளர்கள் கூட்டாக எச்சரித்துள்ளனர். கரியமில வாயு வெளியேற்றத்தை குறைத்துக்கொள்ள வில்லையென்றால் இந்த பூமியின் சில பகுதிகள் மக்கள் வாழ தகுதியற்றதாகிவிடும் என்கின்றனர்.

பருவநிலை மாற்றமும் இந்தியாவும்

இந்தியாவை பொறுத்தவரையில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தப்படியாக கரியமில வாயு வெளியேற்றத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பாரீஸ் ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்ட போதிலும், பருவநிலை மாற்றம் தொடர்பான அதன் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. பணக்கார நாடுகளைவிடவும் வளரும் - ஏழை நாடுகளே பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும். சாலைகளை விரிவாக்கக் காடுகளை அழிப்பது, நிலக்கரி தோண்டியெடுக்க அதிக நிதி ஒதுக்குவது, புதைப்படிவ எரிபொருள்ககளான இயற்கை எரிவாயு, பெட்ரோலியம் எடுப்பதற்கு வளமான வேளாண் நிலம், கடல் பகுதிகளை தனியாருக்குத் தாரைவார்ப்பது போன்ற செயல்பாடுகள் பருவநிலை மாற்ற விளைவுகளை விரும்பி அழைப்பது போன்றுள்ளது.

மத்திய அரசின் புவி அறிவியல் துறை, பருவநிலை மாற்றம் குறித்த அறிக்கை ஒன்றை ஜூலை, 2020ல் வெளியிட்டது. ந்த அறிக்கையில், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் இந்தியாவின் சராசரி வெப்பநிலை சுமார் 4.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரும் எனவும், அதன் விளைவாக கடல் மட்டம் உயர்ந்து கடுமையான வறட்சி, சூறைக்காற்று புயல், வெள்ளப்பெருக்கு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம்பன் புயல், பாலைவன வெட்டுக்கிளி தாக்குதல், உத்தரகாண்ட் பனிச்சிகர வெடிப்பு போன்ற இயற்கை அழிவுகள் இதன் சமகால உதாரணங்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த கிளைமேட் சென்ட்ரல் என்ற நிறுவனம் கடல்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 2050ம் ஆண்டில் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட ஏழு நகரங்களின் கரையோரப் பகுதிகள் நீரில் மூழ்கடிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் மே 20, 2021 அன்று அண்டர்டிகாவில் உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து கடலில் மிதக்கத் தொடங்கியுள்ளது. இது டெல்லியைவிட மூன்று மடங்கு பெரியது. இது போன்ற பெரும் பனிப்பாறைகள் கரையத் தொடங்கினால் கடல்மட்டம் பெருமளவு உயரும்.

என்ன தொடர்பு?


சரி, இதற்கெல்லாம் நாம் என்ன செய்ய போகிறோம்? இலவச பேருந்துப் பயணத்திற்கும் மேற்கண்ட பிரச்சினைகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? ஏற்கனவே கூறியதுபோல் பருவநிலை மாற்ற விளைவுகளைத் தடுக்க கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதுதான் ஒரே வழி. இந்த கரியமில வாயு வெளியேற்றத்தில் வாகனங்கள் வெளியிடும் புகை பெரும் பங்கை வகிக்கிறது. இதை உணர்ந்த லக்ஸம்பர்க் நாடு உலகிலேயே முதல் நாடாக பொது போக்குவரத்தை மக்களுக்கு இலவச சேவையாக அறிவித்துள்ளது. இதன்மூலம் தனியார் வாகனங்களின் பயன்பாடு, தனிநபர் வாகனப் பயன்பாடு குறைந்து கரியமில வாயு வெளியேற்றம் குறையும். நாம் அடையவேண்டிய நெடும் பயணத்தில் இது ஒரு சிறு முயற்சியே. அந்த வகையில் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பானது பெண்கள் முன்னேற்றத்தையும் தாண்டி, பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் செயல்பாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. அதேநேரம் பெண்களை போல ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத்தை வழங்கி, லக்ஸம்பர்க் நாட்டை முன்னுதாரணமாகக் கொண்டு நாம் செயல்பட வேண்டியிருக்கிறது.

                                             - காற்றி 

 


 

No comments:

Post a Comment