Thursday, April 29, 2021

ஆனைய பூரா கொல்ல போரேன்

யானைகளையெல்லாம் கொல்ல போவதாக கூறிக்கொண்டு ஒரு பாட்டி மலைக்காடுகளில் சுற்றி திரிவதை பார்த்துருக்கீங்களா? 
நியாபகம் வரலையா? 
அட... நம்ம மக்கள் செல்வன் தயாரித்து லெனின் பாரதி இயக்கத்தில் வெளியான மேற்குத்தொடர்ச்சிமலை படத்தில் வரும் கிறுக்கு பாட்டிய தான் சொல்றேன்.
கதை என்னான்னா? (படத்தோடது இல்லைங்க, பாட்டியோடது மட்டும் தான்) 
நம்ம பாட்டியும் அவங்க கணவரும் மலைப்பாதையில நடந்து வரும்போது ஒத்தை யானை ஒன்னு அந்த தாத்தாவை மிதிச்சி கொன்னுரும்.அந்த அதிர்ச்சியில மனப்பிறழ்ச்சியான பாட்டி "ஆனைய பூரான் கொல்ல போறேன்" னு மலைகளில் சுத்தி திரிவாங்க.
 இதுல கவனிக்க வேண்டியது என்னனா? இப்டி பைத்தியமா காடு முழுக்க அலையிற பாட்டிய யானைகள் ஒன்றும் செய்வதில்லை. 
அதெப்படி?
இதற்கு முன்னாடி தமிழ் சினிமாக்கள் யானைகளை ஏலம் விட்டிருந்தாலும், அவையெல்லாம் 'அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே' என்ற தொனியிலையே இருக்கும். கும்கி போன்ற சில படங்களில் கூட காட்டு யானை என்றால் கொம்பன் போன்ற டெரர் ரகம் தான். ஆனால் மேற்குத்தொடர்ச்சி மலை யானைகளின் வேறு ஒரு பக்கத்தை குறிப்பதாகவே எனக்கு தோன்றியது. அது யானைகளை பற்றிய படமில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இப்படியாக யானைகளை பற்றிய சிந்தனைகளில் இருக்கும் போதுதான், பவா செல்லதுரை எனும் கதைசொல்லி வாயிலாக என்னை வந்தடைந்தார் டாக்டர்.கே. அதே மேற்குத்தொடர்ச்சி மலையின் வால்பாறை பகுதியில் உள்ள டாப் ஸ்லிப்பின் கால்நடை மருத்துவர் தான் டாக்டர்.கே. செல்ல பிராணிகளின் தலையை தடவி விடுவது, பசுக்களின் வாயில் கையை விடுவது மாதிரியான வேலைகளை செய்யும் கால்நடை மருத்துவர் அல்ல. மலைப்பகுதிகளில் அடர்ந்த வனங்களில் வாழும் ஆபத்தான விலங்குகளுக்கு மருத்துவர். அதாவது மிருக டாக்டர். IFS தேர்வில் வெற்றியடைந்து டாப்சிலிப்பின் வனச்சரக அலுவலராக வரும் ஒரு உயரதிகாரியின் பார்வையில்/குரலில் டாக்டர் கே. வை வரைந்துள்ளார் ஆசிரியர். 
இறந்து பல நாட்கள் ஆனதால் அழுகி நாற்றமெடுத்து புழு புழுத்த கரிய யானை ஒன்றின் சதை சேற்றினுள் இறங்கி அதனை பிணக்கூராய்வு செய்து கொண்டிருக்கிறார் டாக்டர் கே. இது தான் டாக்டர் கே. வை நம்ம வனத்துறை அதிகாரி பார்க்கும் முதல் காட்சி. இதை நினைக்கும் போதெல்லாம் வாந்தி எடுத்து அயர்ச்சியடைகிறார் அதிகாரி. இப்படி ஒரு அருவருப்பான உணர்விலிருந்த அதிகாரியை டாக்டர் கே. விற்கு பத்மஸ்ரீ விருது வாங்கி கொடுக்க போராட வைத்தது எது? 
மிருக டாக்டர் எப்படி யானை டாக்டர் ஆனாரு? 
யானைகளுக்கும் அவருக்குமான உறவு எத்தகையது? 
யானை உலகத்திற்கு டாக்டர் ஆற்றிய பணி எத்தகையது? 
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலே எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் என்ற சிறுகதை தொகுப்பிலுள்ள 'யானை டாக்டர்' கதை.
      
     யானை டாக்டரை, அழுகிய யானையின் நடுவே பார்த்ததினால் அதிகாரி அடைந்த அருவருப்பு மனநிலையை, 'இங்கே கொட்டி கிடைக்கும் பெரிய கருப்பு வண்டுகளின் குட்டி கொழந்தைகள் தான் இந்த புழுக்கள், குழந்தைகளை பார்த்து நாம் ஏன் பயப்பட வேண்டுமென' கூறி, அந்த புழுவை எடுத்து கொஞ்சும் அளவிற்கு மாற்றிய விதம் அழகு. 
டாக்டர் கே. 1000 கும் மேற்பட்ட யானைகளுக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பார் என்றார்கள். 300 கும் மேல் யானை பிரசவம் பார்த்திருக்கர். 100 கணக்கில் யானை சடலங்களை சவப்பரிசோதனை செய்திருக்கார். யானைச் சடலங்களை சவப்பரிசோதனை செய்வதற்கு இப்போதிருக்கும் முறைமையையே அவர்தான் உருவாக்கினார். யானைகளின் உடலுக்குள் உலோக எலும்புகளை பொருத்துவதை 10 முறைக்கும் மேல் வெற்றிகரமாகச் செய்திருக்கிறார். டாக்டர் கே. யானைகளின் உடல்நிலையை பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்று உள்ளது. இப்படியாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல தெற்காசியாவின் மிகப்பெரிய யானை டாக்டர் ஆனார் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. இதுமட்டுமல்ல, அவர் ஒரு இலக்கியவாதி, தத்துவவாதி . அவர் எழுதும் உலக புகழ்பெற்ற அறிவியல் ஆய்விதழ்களில் கம்பனையும், ஷெல்லியையும், பரணரையும் படர விட்டிருப்பார். காந்தி பிரியர்.
அனால் இவையெல்லாத்தையும் விட வனத்துறை அதிகாரி டாக்டரை கொண்டாட காரணமாக நான் பார்ப்பது, வனவிலங்குகள் தங்களுக்கு ஏற்படும் காயத்தை ஆற்ற பல கி.மீ தூரம் வரை கூட பயணித்து டாக்டரிடம் வருவதும் ஆபத்தான செந்நாய் கூட்டம் முதல் காட்டுயானைகள் கூட்டம் வரை அவற்றின் நடுவே தனியாளாக சென்று சிகிச்சையளிப்பதும் தான். சவாலான இப்பணியில் டாக்டருக்கும் காட்டுயிர்களுக்கும் இடையேயான புரிதலை, அந்த மேஜிக்கை வியந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நம்ம யானை டாக்டர், யானைகளை பற்றியும், அவற்றின் பராமரிப்பை பற்றியும் கூறுவதில் என்னுடைய வியப்பிற்கும் கைத்தட்டலுக்கும் உள்ளானவை  பின்வருமாறு;
ஆள் மேலேஏறியதும் தான் உயரத்தை அந்த ஆளின் உயரத்துடன் சேர்த்துக் கணக்கிட்டு கொள்ளும் யானையின் நுட்பத்தை ஒவொருமுறையும் பிரமிக்காமலிருக்க முடியவில்லை.
மனிதனோட எச்சபுத்தியிலே ஒரு சொர்க்கத்தையும் கடவுளையும் உண்டு பண்ணி வச்சிருக்கானே அதிலே மிருகங்களுக்கு எடம் கிடையாதாம். நான்சென்ஸ்.
யானையின் அடிக்கால் ஒரு மணல் மூட்டை போன்றது.
ஒரு நாளில் முப்பது லிட்டர் தண்ணீர் குடித்து இருநூறு கிலோ உணவு உண்டு ஐம்பது கிலோமீட்டர் நடந்து உயிர் அப்படி ஐந்து நாட்கள் நின்றாள் மெலிந்து உருக்குலைந்துவிடும்.
'சரி அது (பத்மஸ்ரீ), அதை இந்தக்காட்டிலே வச்சுண்டு நான் என பண்ணறது? வெளிய போயி செல்வாகிட்ட(யானை) காட்டி இந்த பாரு இனிமே நீ மரியாதையா நடந்துக்க நான் பிரம்ம ஸ்ரீயாக்கும்னு சொல்லவா?
'இந்தக்காட்ட நீ புரிஞ்சிகிட்டாத்தான் இங்க எதையாவது செய்ய முடியும். காட்ட புரிஞ்சிக்கனும்னா காட்டிலே வாழனும். இங்க வாழணும்னா முதல் விஷயம் உன்னோட அந்த உலகத்துல இருக்கிற பணம் புகழ் அதிகாரம் லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் உதறிண்டு நீயும் இந்த குரங்குகளை மாதிரி இந்த யானையை மாதிரி இங்க இருக்கிறதுதான்'.
கோயில் யானைகளை மாதிரி இழிவுபட்டு அவமானப்பட்டு பட்டினி கிடக்குற ஜீவன் வேற இல்லை. கண்டிப்பா தடை செஞ்சாகணும். மதச்சடங்குகள்னு சொல்லி சிலபேர் அதை எதிர்ப்பாங்க. ஆனா நூறுவருசம் முன்னாடி பொட்டுக் கட்டுறதையும் அப்டிச் சொல்லித்தான் எதிர்த்தாங்க.
ரிப்போர்ட்டை பாத்தேல்ல? கோயில் யானைகள் எப்பவுமே டென்ஷனா இருக்கு. பெரும்பாலான கோயில் யானைகளுக்கு கடுமையான டயபடிஸ் இருக்கு. அதுகளோட காலில் புண்ணு வந்தா ஆறுறதே இல்ல.
இறுதியாக, பல கிலோமீட்டர்கள் கடந்து யானைகள் டாக்டரை தேடி வருகிறது என கூறினேன் அல்லவா? யானைகள் வந்தாலும் சரி, டாக்டர் போனாலும் சரி அதற்கு பெரும்பாலும் யானைகளின் காலில் ஏற்படும் காயம் தான் காரணமாக இருக்கும். இப்படி காயம் ஏற்படும் யானைகளுக்கு இரண்டே நாள்களில் சீல் வைத்து விடும். புழுக்கள் உள்ளே நுழையும். புழுக்கள் சதையை துளைத்து சீலை உள்ளே கொண்டு செல்லும். முக்கியமான குருதிப்பாதைகளையோ எலும்பையோ அவை தொட்டுவிட்ட தென்றால் அதன்பின் யானை உயிருடன் எஞ்சாது. இதில் கவலை பட வேண்டிய விடயம், காட்டின் இந்த பேருயிருக்கு காயத்தை ஏற்படுத்துவது, விடுமுறை நாட்களில் மகிழ்ச்சியாய் இருக்கேனென்ற பேர்வழியில் காடுகளுக்கு சென்று குடித்து கும்மாளமிட்டு மனிதன் வீசியெறிந்து வரும் பீர்பாட்டில்கள் தான்.
டாக்டர் கே.யின் சிவந்த முகங்கள் கூறிய இந்த உண்மை என் மனதை அறுத்து விட்டது. அழுகையுடனும் கோவத்துடனும் சொல்கிறேன், தயவு செய்து மலைக்காடுகளுக்கு செல்பவர்கள் கண்ணாடி பாட்டில்களை தூக்கி ஏரியாதீர்கள். பாட்டில்கள் மட்டுமல்ல குப்பைகள் எல்லாவற்றையும் எப்படி கையாள வேண்டுமோ அப்படி கையாளுங்கள். ஏனெனில் இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமில்லை. அதை கரோனா உங்களுக்கு உணர்த்தியிருக்குமென நம்புகிறேன். 
- உங்கள் காற்றி 
கூடுதல் தகவல்கள்:
டாக்டர் கே. வின் பரிந்துரையின் பேரில் வருடத்திற்கு ஒரு முறை கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது.உலகப்புகழ் பெற்ற ஹாரி மார்ஷல் டாக்டரை பற்றி 'டாக்டர் கே' என்ற பெயரில் பி.பி.சி. க்காக ஆவணப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார்.

4 comments:

  1. வியப்பு... அவ்வளவு தான் இதுக்கு சொல்லு முடியும்.. சிறப்பு....

    ReplyDelete
  2. அருமை.விடுமுறை நாட்களில் vacation என்ற பெயரில் வனத்திற்குள் சென்று கல், மண், தாவரங்கள், என எதையும் விட்டுவைக்காமல் சேதப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் நானும் நேரில் தினமும் பார்க்கிறேன்.

    காட்டை புரிந்துகொண்டால் தான் காட்டிற்க்குள் மட்டுமல்ல நாட்டிற்க்குள்ளும் வாழ முடியும் என்பது எனது அனுபவமும் கூட. வாழ்த்துக்கள். புத்தக வாசிப்பின் உணர்வை அதன் மதிப்புரையில் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. சிறப்பு... உங்கள் மதிப்புரையே படிப்பதற்கு அழகாய், ஆர்வமாய் இருக்கிறது.. வாழ்த்துகள்

    ReplyDelete
  4. சிறப்பு

    ReplyDelete